உடைந்தது கடவுள்


உலகம் சுற்றி
நடக்கும் கொடுமைகளால்
ஒன்றிரண்டாய்
தென்படுகிறது மனிதத்தின் தலை
தென்படாத
மனிதத்திற்கிடையே உடைகிறது கடவுள்!

இருநூறு ஆண்டுகளுக்கு மேல்
அடிமைபட்டு கிடந்த மண்ணில் 
புதைந்த உயிர்களின்
மறந்த வலியால்
ஈழத்தில் நடந்த கொலைகளில் - உடைந்தது கடவுள்!

தெருவெல்லாம் பிச்சையெடுத்து
வழி நெடுகும் 
இறைந்த வறுமைக்கு
வழி தேடாத அரசின் மெத்தனத்தில்
உடைகிறது கடவுள்!

பகலெல்லாம் வெய்யிலில் கல்சுமந்து 
உடல் வாட்டும் இரவு குளிரில் வெல்டிங் அடித்து
இரும்படித்த வியர்வையின் அசதியில்
சேற்றுசகதியில் சுண்ணாம்பில் வெந்து போன உழைப்பில்
கூலிவேலையில் மாரடிக்கும் பணத்தில்
வாய்கூசாமல் லஞ்சம் கேட்கும்
களவாணிகளின் மேதாவி தனத்தில்
உடைந்தே போகிறது கடவுள்!

அவசரத்திற்கு செய்த உதவி போக
நூற்றிற்கு பத்து வட்டியென
உறிஞ்சிக் குடிக்கும் ரத்தத்து நெடியை
வீட்டில் சொத்தாக சேர்க்கும்
வட்டிப் பணத்தில் - உடைந்தது கடவுள்! 

நூறு ரூபாய்க்கு துணி வாங்கி
நூற்றி ஐம்பதுக்கு சட்டை தைத்து
தினமும் இரண்டு ரூபாயில் பெட்டி போட்டும்
ஒரு ரூபாயில் பட்டினி கிடக்கும்
ஏழைகளை நினைக்காததில் - உடைகிறது கடவுள்!

கூரைவீட்டு ஓட்டை வழியே
கிழிந்த ரவிக்கை உடம்பு தேடும்
மாடிவீட்டு தோள் பசிக்கு
விலையாகும் முதிர்கன்னிகளின்
விலைபோகா உத்தமிகளின் ஒரு சொட்டுக் கண்­ணீரில்
கிடைக்காத வாழ்க்கையாக உடைகிறது கடவுள்!

பார்வைக்கே உயிர்விட்டு
அருகாமைக்கு தவமிருந்து
உடலெல்லாம் காதல் பூத்து
கிடைக்காத காதலிக்கு
மரணத்தை பரிசளிக்கும்
தெளிவில்லா இளைஞர்களின் இளம்பெண்களின்
பெற்றோர்களின் அறியாமையிலும்
புரிந்து கொள்ளாத அன்பிலும் - உடைந்தே போகிறது கடவுள்!

பொட்டிழந்த நெற்றியிலிருந்து
விட்டொழியா காமப் பசிக்கு
நாம் தந்த விதவையென்னும் ஒற்றை பட்டத்தில்
ஊரெல்லாம் மேயும் கண்களின் கொடூரத்தில்
கணினி புத்தகம் தொலைகாட்சி திரைப்படமென
விநியோகிக்கும் - காம ஆசையில்,
இன்றும் அவர்களை ஒதுக்கியே பார்க்கும்
தனிமையின் கொடுமையில்
கருகி உதிரும் இளம் இதயங்களின் முறிவில்
உடைந்தே போகிறது கடவுள்!

காவல் காக்க உடையுடுத்தி
அதட்டிய குரலில் கேட்டதெல்லாம் பெற்று
சோறு போட்ட மக்கள் பணத்தில்
சேலை வாங்கி கொடுத்த நன்றியை
வாங்கித் தின்ற கையோடு மறந்ததில்,
அநீதிகள் அழிய பார்த்து
அடக்க முடியாத காக்கி சட்டையின் கோழைத்தனத்தில்
உடைந்தது கடவுள்!
வெள்ளையாய் ஆடை உடுத்தி,
கருப்பில் இதயம் சுமந்து,
குடிக்கும் போதைக்கு காரம் வேண்டி - ஏழைகளின் ரத்தத்தில்
உப்பு சுவைத்து,
ஏசி காரில் -
குளிரும் உடலுக்கு வெப்பமூட்டும் இளைய பெண்கள் தேடி,
மூட அரசியல் நடத்தும் -
மூர்க்கர் சிலரின் செய்யாத கடமைகளில்
உடைகிறது கடவுள்!
கடவுளின் ஒலி அகற்றி
காமத்தின் வெளி புகுந்து
காசுக்கு மதம் விற்று
கயவனின் வாக்கில் உதித்த
அத்தனை பொய்தனிலும்
உடைந்தது உடைந்தது உடைந்தது கடவுள்!
மதத்தில் கடவுள் அறுத்து
மனிதத்தில் மதம் திணித்து
மதத்திற்காய் மனிதனின் தலை கொய்து
சொட்டிய ரத்தத்தின் ஈரமெல்லாம்
இரக்கமின்றி கடவுள் பெயரெழுதி
மறக்கும் துறக்கும் மதத்தின் திணிப்புகளில்
மதத்தால் மனிதன் மாண்ட இடத்திலிருந்து
உடைந்தே போனது கடவுள்!
உருவம் உண்டென்று சொல்லி
அருவம் ஒன்றென்று சொல்லி
கடவுள் உண்டென்று சொல்லி
எவனும் இல்லையென்று சொல்லி
நன்றி மறந்த களிப்பில் கடவுள் இல்லாமல் போகும் இருப்பில்
எல்லாமுமாய் இருக்கும் கடவுள்
இல்லாமலே போக -
மனிதன் ஆற்றிய குற்றந்தனில் மாண்டு
உடைந்தே போனது; உள்ள கடவுள்!!

                                                                -இப்படிக்கு நாத்திகன்

Post a Comment

0 Comments