கண்ணம்மா என் காதலி



கண்ணம்மா என் காதலி

காட்சி வியப்பு


சுட்டும்விழிச் சுடர்தான், -- கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, -- கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் -- புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் -- தெரியும்
நக்ஷத்தி ரங்களடீ!


சோலைமல ரொளியோ -- உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே -- உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக் குயிலோசை -- உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ, -- கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.


சாத்திரம் பேசுகிறாய், -- கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ?
ஆத்திரங் கொண்டவர்க்கே, -- கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் -- வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ? -- இது பார்,
கன்னத்து முத்தமொன்று! 


பின்னே வந்து நின்று கண் மறைத்தல்


மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே
வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வானவளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல்கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சுசெலுத்தி,
நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.


ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்மறைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டியறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன்,
ஓங்கி வருமுவகை யூற்றிலறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டிலறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடிகண்ணம்மா,
மாய மெவரிடத்தில்?’ என்றுமொழிந்தேன்.



சிரித்த ஒலியிலவள் கைவிலக்கியே,
திருமித் தழுவி, “என்ன செய்திசொல்” என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்னகண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்னகண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்னகண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்னகண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி” என்றாள்.


“நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”

முகத்திரை களைதல்


தில்லித் துருக்கர்செய்த வழக்கம -- பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்துவைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கிமுன்னிற்கும் -- இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங்கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் -- துணி
மறைத்தத னாலழகு மறைந்ததில்லை;
சொல்லித் தெரிவதில்லை, மன்மதக்கலை -- முகச்
சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ?


ஆரியர் முன்னெறிகள் மேன்மையென்கிறாய்? -- பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகியபின் -- வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாணமென்னடீ?
யாரிருந் தென்னையிங்கு தடுத்திடுவார் -- வலு
வாக முகத்திரையை அகற்றிவிட்டால்?
காரிய மில்லையடி வீண்பசப்பிலே -- கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?


நாணிக் கண் புதைத்தல்

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை -- இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாணமுற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்றகருத்தோ -- இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன் -- நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? -- எனக்
கெண்ணப் படுவதில்லை யேடிகண்ணம்மா!


கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? -- கன்னங்
கன்றிச் சிவக்கமுத்த மிட்டதில்லையோ?
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை, -- இரண்
டாவியுமொன் றாகுமெனக் கொண்டதில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே? -- துகில்
பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டுவெள்குமோ?


நாட்டினிற் பெண்களுக்கு நாயகர்சொல்லும் -- சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியுமொன்று கலந்திடுங்கால் -- தம்முள்
பன்னி உபசரணை பேசுவதுண்டோ?
நீட்டுங் கதிர்களொடு நிலவுவந்தே -- விண்ணை
நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினையச் சோதிகவ்வுங்கால் -- அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ?


சாத்திரக் காரரிடம் கேட்டுவந்திட்டேன்; -- அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில்வந்த உறவன்றடீ; -- மிக
நெடும்பண்டைக் காலமுதல் நேர்ந்துவந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, -- அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தைநான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான்;


முன்னை மிகப்பழமை இரணியனாம் -- எந்தை
மூர்க்கந் தவிர்க்கவந்த நரசிங்கன் நீ,
பின்னையொர் புத்தனென நான்வளர்ந்திட்டேன் -- ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னையெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில் மிகவல்லர்காண்; -- அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரணமில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; -- இதில்
எதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே?

குறிப்பிடம் தவறியது


தீர்த்தக் கரையினிலே -- தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந் தால்வருவேன் -- வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் -- அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் -- உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!
 

 
மேனி கொதிக்குதடீ -- தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!
வானி லிடத்தையெல்லாம் -- இந்த வெண்ணிலா
வந்து தழுவுதுபார்.
மோனத் திருக்குதடீ -- இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் -- பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?


கடுமை யுடையதடீ -- எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்தபின்னும் -- எண்ணும்போதுநான்
அங்கு வருவதற்கில்லை;
கொடுமை பொறுக்கவில்லை -- கட்டுங் காவலும்
கூடிக் கிடக்குதங்கே;
நடுமை யரசியவள் -- எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.


கூடிப் பிரியாமலே -- ஓரிராவெலாம்
கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே, -- உன்றன்மேனியை
ஆயிரங் கோடிமுறை
நாடித் தழுவிமனக் -- குறைதீர்ந்துநான்
நல்ல களியெய்தியே
பாடிப் பரவசமாய் -- நிற்கவேதவம்
பண்ணிய தில்லையடி’!

யோகம்


பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;
தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

 வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;
பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு;
காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வுநிலையே! கண்ணம்மா!

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே:
கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசைமதுவே, கனியே, அள்ளுசுவையே! கண்ணம்மா!
 
காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!
 
பு{[பாட பேதம்]: ‘பாண்ட மிங்கு நானுனக்கு’
எல்லையில்லை -- கவிமணி
எண்ணமில்லை -- முதற்பதிப்பு
நாடியது -- கவிமணி}

தாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவ மாய்ச்சமைந்தாய்! உள்ளமுதமே! கண்ணம்மா!



Post a Comment

0 Comments